செய்திகள்

மணிமுத்தாறு பகுதியில் ஊருக்குள் புகுந்த கரடி: தோட்டத்தில் பயிர்களை நாசம் செய்தது

Published On 2016-09-01 16:28 IST   |   Update On 2016-09-01 16:28:00 IST
மணிமுத்தாறு பகுதியில் ஊருக்குள் புகுந்த கரடி தோட்டத்தில் பயிர்களை நாசம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சமீப காலமாக மழை இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தடுப்பு வேலிகள் அமைத்தும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை.

ஊருக்குள் வரும் வன விலங்குகள் மலை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்வதோடு பயிர்களையும் சேதப்படுத்துகிறது. இன்று அதிகாலை மணிமுத்தாறு மலைப்பகுதியில் இருந்து ஒரு கரடி தப்பி வந்து ஊருக்குள் புகுந்தது.

மணிமுத்தாறு நகரை ஒட்டிய தோட்டப்பகுதியில் அந்த கரடி உலவியது. அப்பகுதியை சேர்ந்த சட்டநாதன் என்பவரது தோட்டத்தில் பயிர்களையும் கரடி சேதப்படுத்தியது. இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் திரண்டனர். பொதுமக்களை பார்த்ததும் கரடி அங்கிருந்த தென்னை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

இதுபற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனகாப்பாளர் மோகன் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் 12 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் கரடியை காட்டுக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News