செய்திகள்

சீர்காழி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.31½ லட்சம் மோசடி: தலைவர் உள்பட 3 பேர் கைது

Published On 2016-08-31 16:27 IST   |   Update On 2016-08-31 16:27:00 IST
சீர்காழி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.31½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அடுத்த திருவாழியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது.

இந்த வங்கியின் மேலாளராக மகாதேவன் என்பவரும், எழுத்தராக சிவானந்தமும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வங்கி தலைவராக அ.தி.மு.க. பிரமுகர் திருமாறன் உள்ளார்.

இந்நிலையில் இந்த கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டதில் ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் மோசடி நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.24 லட்சம் அளவில் நிதி முறைகேடு உட்பட ரூ.31½ லட்சம் அளவில் மோசடி நடந்துள்ளதாகவும் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து மயிலாடுதுறை கோட்ட துணைப் பதிவாளர் சரவணகோபால் நாகை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் இன்று அதிகாலை திருவாழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்தனர். அங்கு வங்கி மேலாளர் மகாதேவன், எழுத்தர் சிவானந்தம், தலைவர் திருமாறன் ஆகிய 3 பேரிடமும் விசாரித்தனர். பின்னர் 3 பேரையும் நாகைக்கு அழைத்து சென்றனர். வங்கி நிதி மோசடி குறித்து விசாரித்த பின்னர் அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News