செய்திகள்

கழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை: போலீஸ் சூப்பிரண்டு நேரடி விசாரணை

Published On 2016-08-26 17:17 IST   |   Update On 2016-08-26 17:17:00 IST
கழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை செய்யப்பட்ட குறித்து போலீஸ் சூப்பிரண்டு நேரடியாக விசாரணை நடத்தினார். மேலும் சிறுவன் கொலையில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்த தொழிலாளி முருகேசன். இவரது மனைவி சங்கீதா.இவர்களது மகன் நித்தீஷ் (வயது 4). சின்னசேலம் அருகே உள்ள பள்ளியில் நித்தீஷ் பிரிகேஜி படித்து வந்தான்.

பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பிய நித்தீஷ் வீட்டின் முன்பு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவன் மாயமானான். பெற்றோர் பல்வேறு பகுதிகளில் தேடினர்.

அப்போது வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவறையில் நித்தீஷ் பிணமாக கிடந்தான். அவனது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.

சிறுவன் பிணத்தை முருகேசன் வீட்டிற்குள் தூக்கிவந்தார். போலீசுக்கு தெரிவிக்காமல் இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு நடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

முருகேசனிடம் அதிரடி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறுவன் பிணமாக கிடந்த இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. அங்கு நின்று கொண்டிருந்த முருகேசனை கவ்விப்பிடித்தது.

இதனால் முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் துருவி துருவி விசாரித்தனர். சிறுவனின் பிணத்தை தூக்கி வந்ததால் மோப்ப நாய் தன்னை கவ்விப் பிடித்ததாக முருகேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் விசாரித்தபோது மகன் மீது முருகேசன் அதிக பாசமாக இருந்தது தெரியவந்தது. எனவே முருகேசனுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் கருதினர்.

இதையடுத்து சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கு சொத்து பிரச்சினை காரணமா? முன்விரோதம் காரணமா? முருகேசனை பழிவாங்க யாராவது அவரது மகனை கொன்றுவிட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று மதியம் சித்தேரி கிராமத்திற்கு வந்தார். நித்தீஷ் கொலை செய்யப்பட்டு கிடந்த கழிவறை மற்றும் அதைச்சுற்றியுள்ள முள்புதர் பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் போலீஸ் மோப்பநாய் மோப்பம் பிடித்து ஓடிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார். நித்தீசின் தந்தை முருகேசன், தாய் சங்கீதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

நித்தீசின் சகோதரிகள் சக்திபரமேஸ்வரி, சங்கரேஸ்வரி ஆகியோரிடம் நித்தீஷ் பள்ளி முடிந்து வந்தவுடன் எங்கு செல்வான், யாருடன் விளையாடுவான், அவன் யாருடன் நெருங்கி பழகுவான் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பதிலளித்தனர்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சிறுவன் கொலை தொடர்பாக ஏதேனும் தகவல் தெரியுமா என்று கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சிறுவன் கொலையில் துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜாராம், ரமேஷ்பாபு, சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

சிறுவனை 2 பேர் சேர்ந்து கொன்று இருக்கலாம் என்று கருதுகின்றனர். கொலையாளிகள் அந்த பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். தனிப்படை போலீசார் அவர்களை கண்காணித்து வருகின்றனர்.

திட்டக்குடி, ராமநத்தம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கொலையாளிகளை விரைவில் பிடிப்போம் என்று போலீசார் தெரிவித்தனர்.

சிறுவன் நித்தீஷ் கொலையில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாததால் சித்தேரி பகுதியில் பொதுமக்கள் இடையே பீதி ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வந்ததும் தங்களது குழந்தைகளை வெளியே விளையாட செல்ல வேண்டாம் என்று கூறுகின்றனர்.

இரவு நேரத்தில் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. சைகோ கொலையாளி சிறுவனை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர்.

எனவே அந்த கொலையாளியால் தங்கள் குழந்தைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தகொலை சம்பவத்தால் திட்டக்குடி ராமநத்தம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News