செய்திகள்

சிதம்பரம் அருகே கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் யார்?: 3 மாவட்டங்களில் போலீசார் விசாரணை

Published On 2016-08-26 16:24 IST   |   Update On 2016-08-26 16:24:00 IST
சிதம்பரம் அருகே கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண் யார் என்று 3 மாவட்டங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிதம்பரம்:

சிதம்பரம் அருகே உள்ள விளாந்திரைமேடு பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே முள்புதருக்குள் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடந்தது. பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

இறந்து கிடந்த பெண் ஊதா மற்றும் வெள்ளை நிற புடவை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியவில்லை. மர்ம மனிதர்கள் அவரை கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதையடுத்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேலு தலைமை யில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்ராஜ் இளவரசன் ஆகியோர் இடம்பெற்றனர். பெண் பிணமாக கிடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் எல்லையில் உள்ளது.

எனவே கொலை செய்யப்பட்ட பெண் நாகை மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். எனவே அந்த பகுதியில் பெண்கள் யாராவது காணாமல் போயிருக்கிறார்களா என்று விசாரித்தனர்.

மேலும் அரியலுர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த 1 வாரத்தில் காணாமல் போன பெண்கள் யார்? யார் என்ற பட்டியலை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.

விளாந்திரைமேடு பகுதியை சுற்றியுள்ள இடங்களில் உள்ளவர்களிடமும் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

Similar News