திருக்கடையூர் அருகே ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர் வீட்டில் நகை -பணம் கொள்ளை
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள ஆக்கூர் முக்கூட்டு தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். மின்வாரியத்தில் போர் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
நேற்று இரவு இவர் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினார். இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் கீழ் தளத்தில் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றது. பின்னர் அங்கிருந்த 2 பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 40 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை எழுந்த குணசேகரன், அவரது மனைவி ஆகியோர் கீழ் தளத்திற்கு வந்தனர். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் அவர்கள் வெளியே வந்து சத்தம் போட்டனர்.
இந்த கொள்ளை குறித்து செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்படுகிறது. கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.