செய்திகள்

அரசு பள்ளிகளில் படிப்பவர்களும் சாதனை படைக்க முடியும்: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேச்சு

Published On 2016-08-23 10:36 IST   |   Update On 2016-08-23 10:36:00 IST
விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளில் படிப்பவர்களும் சாதனை படைக்க முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பேசினார்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அருகே உள்ள இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் மக்கள் பாதை இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமை தாங்கி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

கல்வியில் சமத்துவம் வேண்டும். அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரம் உயர வேண்டும். அரசு பள்ளி மாணவர்களால் டாக்டராகவும், என்ஜினீயராகவும், விஞ்ஞானிகளாகவும், என்னை போன்ற கலெக்டராகவும் உருவாக முடியும். ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிக்கூடங்கள் தான்.

நாம் அரசு பள்ளிக்கு செல்ல காரணம் தமிழ் சமூகத்தினர். அரசு பள்ளியில் தான் மாணவர்கள் தமிழை வளர்க்கிறார்கள். நான் காணொலி காட்சி மூலமாக பல்வேறு அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

மாணவர்களை தரம் மிக்கவர்களாக மாற்றுவதற்கு அரசு பள்ளி ஆசிரியர்களும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் பாதை இயக்கம் ஒரு சமூக சேவை அமைப்பு. ஏழைகளை ஏற்றிவிடும் ஏணி. நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் அமைப்பாகும்.

தமிழ் வழியில் படிப்பதால் மாணவர்கள் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. தாழ்வு மனப்பான்மை ஆசிரியருக்கும் வரக்கூடாது. ஒப்பற்ற அடையாளம் நம் தமிழ்மொழி, தமிழை தாழ்வாக கருதாதீர்கள். அதனை வளர்க்க வேண்டும். ஆசிரியர்கள் டாக்டர்கள், என்ஜினீயர்கள், கலெக்டர்களை உருவாக்கி விட்டோம் என்று இருந்து விடக்கூடாது. நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News