செய்திகள்

கோவை ரேஸ்கோர்சில் கணவருடன் நடைப்பயிற்சி சென்ற பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு

Published On 2016-08-19 12:01 GMT   |   Update On 2016-08-19 12:01 GMT
கோவை ரேஸ்கோர்சில் கணவருடன் நடைப்பயிற்சி சென்ற பெண்ணை தாக்கி நகைபறித்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் குமார். எண்ணைய் வியாபாரி. இவரது மனைவி நாகலதா(வயது 40).

கணவன், மனைவி இருவரும் தினமும் இரவு ரேஸ் கோர்சில் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். நேற்று இரவும் நடைப்பயிற்சி சென்றனர். மாவட்ட வனஅதிகாரி அலுவலக காம்பவுண்டு அருகே சென்ற போது இவர்களின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நாகலதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கநகையை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நாகலதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். உடனே நகைபறித்த வாலிபர்கள் நாகலதாவை கீழே தள்ளி விட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர்.

இதுகுறித்து நாகலதா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அலுவலகங்கள் நிறைந்தது. இங்கு நடைப் பயிற்சி சென்ற பெண்ணை தாக்கி நகை பறித்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம்போல நாங்கள் நடைப்பயிற்சி சென்றோம். பூங்கா அருகே பார்க்கிங் பகுதியில் இரண்டு வாலிபர்கள் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு நின்றனர். சந்தேகத்திற்கிடமாக அவர்கள் நிற்பதை பார்த்தேன். எனினும் மோட்டார் சைக்கிள் அருகிலேயே நின்றதால் அவர்களை கண்டு கொள்ளாமல் நான் தொடர்ந்து நடைப்பயிற்சி சென்றேன்.

திடீரென மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த அவர்கள் எனது மனைவி கழுத்தில் இருந்த நகையை பறித்து விட்டு அவளை கீழே தள்ளினர். நான் மோட்டார் சைக்கிளால் மோதி விட்டு நிற்காமல் செல்கிறார்களோ என்று தான் நினைத்தேன். உடனே கீழே விழுந்த எனது மனைவியை தூக்கினேன்.

அப்போது தான் எனது மனைவி, வாலிபர்கள் நகை பறித்து செல்வதாக சத்தம் போட்டார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News