செய்திகள்

தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை மைய இயக்குனர் தகவல்

Published On 2016-08-19 02:19 GMT   |   Update On 2016-08-19 02:19 GMT
கடல் காற்று வலுவிழந்து தரையை நோக்கி வீசுவதால் தமிழ்நாட்டில் மேலும் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னை:

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. 2-வது கோடை வந்துவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெப்பம் அதிகமாக உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகமாக இருந்தது. அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரையாகும். இந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. கடந்த 2 வாரங்களாக தென் மேற்கு பருவமழை குறைந்துவிட்டது. அதாவது சராசரியை விட 70 முதல் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டது. ஆங்காங்கே ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.

மேலும் காற்றில் ஈரப்பதம் குறைந்து காணப்படுகிறது. கடல்காற்று தரையை நோக்கி வீசும்போது மிகவும் வலு இழந்து காணப்படுகிறது. தென் இந்தியாவில் வளி மண்டலத்தின் மேல் இருந்து கீழ் நோக்கி வீசும் காற்று, வழக்கத்தைவிட அதிகமாக வீசுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் மழை மேகம் உருவாவதில்லை. அதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே இப்போதைய கணிப்பின்படி தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

ஏதாவது ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்.

இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Similar News