செய்திகள்
செந்துறை அருகே மினிவேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே மினிவேன் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர், சொந்தமாக மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மேலும் இவர், அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தில் நிர்வாகியாக இருக்கிறார். இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் இளையராஜா தனது மினி வேனை ஓட்டி வந்தார். அப்போது அங்கு வந்த சிலர் மினி வேனை வழிமறித்து கண்ணாடியை உடைத்தனர்.
மேலும் இளையராஜாவை கற்கள், கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதனை தட்டி கேட்க வந்த இளையராஜாவின் நண்பர்கள் விஜய், வெற்றி ஆகியோரையும் அந்த நபர்கள் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த இளையராஜா, விஜய், வெற்றி ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் நல்லநாயகபுரம் பகுதியில் வசிக்கும் இளையராஜா உள்ளிட்டோரின் உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் திரண்டனர். பின்னர், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செந்துறை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன் பிறகு மறியலை கைவிட்டு அந்த நபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.