அரியலூர் அருகே லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் சின்னப்பட்டாகாடு பகுதியில் உள்ள தனியார் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் இருந்து திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் தனியார் சிமெண்ட் ஆலைகளுக்கு லாரிகள் மூலம் சுண்ணாம்பு கற்கள் ஏற்றி செல்லப்படுகிறது.
இந்த லாரிகளால் அருங்கால் கல்லக்குடி கிராமத்தில் சாலை சேதமடைவதாகவும், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லையாம்.
இதனால் கடந்த மாதம் 28-ந்தேதி அந்த வழியே செல்லும் லாரிகளை சிறைபிடிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அறிவித்தனர். இதனால் அந்த வழியே சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் சில நாட்களாக செல்லவில்லை.
இந்நிலையில் நேற்று மீண்டும் அருங்கால் கல்லக்குடி கிராமத்தின் வழியாக சுண்ணாம்புக்கல் லாரிகள் இயக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள், அவ்வழியே சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.