ஜெயங்கொண்டத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மறியல்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தில் 100 நாள் திட்டப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை நடுத்தெரு குட்டையில் பணிதுவங்கியது. அப்போது அங்கு குடும்பத்திற்கு ஒருவர் மட்டும் வேலைசெய்ய வேண்டும். மற்றவர்கள் இடத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென சம்மந்தம் இல்லாத ஒருவர் கூறினர்.
இதனால் பொதுமக்கள் திரண்டு கல்லாத்தூர் - மீன்சுருட்டி சாலையில் அனுமார் கோயில் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். நேற்றுவரை அனைவருக்கும் வேலை வழங்கி இன்று திடீரென ஒருவர்மட்டும் வேலைசெய்ய வேண்டுமென பணிதள பொறுப்பாளர் இல்லாத ஒருவர் கூறியதை கண்டித்தும் தொழிலாளர்களை பணிதள பொறுப்பாளர் மட்டுமே பணியை கவனிக்கவேண்டும் மற்றவர்கள் அவ்விடத்தில் நின்று அதிகாரம் செய்வதும் தவறாக பேசுவதும் தவிர்க்க வேண்டும்.
வேலைக்கான சம்பளத்தை 3 மாதம் கழித்து வழங்குவதை தவிர்த்து குறிப்பிட்ட நாளில் வழங்கவேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஜெயங்கொண்டம் ஒன்றிய ஆணையர் கலையரசன், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முறையாக அனைத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் அடிப்படையில் தொழிலாளர்கள் சாலை மறியலைகைவிட்டு கலைந்து சென்றனர், இதனால் கல்லாத்தூர் மீன்சுருட்டி சாலையில் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.