பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய டாஸ்மாக் ஊழியர் கைது
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, தா.பழூர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 39). இவர் கோட்டியால் பாண்டி பஜார் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 28-ந்தேதி இரவு விற்பனை முடிந்ததும், விற்பனையான ரூ.90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு, திருமுருகன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது புனிதவனத்து சின்னப்பர் கோவில் பிரிவு பாதை அருகே 5 பேர் கொண்ட ஒரு கும்பல் தன்னை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, தன்னிடம் இருந்த பணப்பை, செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்றதாக கூறினார்.
இதுகுறித்து திருமுருகன் தா.பழூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, திருமுருகனிடம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருமுருகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்படவே, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரே பணத்தை மறைத்து வைத்து கொள்ளை போனதாக நாடகமாடியது தெரிய வந்தது.
இதையடுத்து திருமுருகனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.