செய்திகள்

மயிலாப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் 36 பவுன்-ரூ.4½ லட்சம் கொள்ளை

Published On 2016-07-30 14:19 IST   |   Update On 2016-07-30 14:19:00 IST
மயிலாப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் 36 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவான்மியூர்:

மயிலாப்பூர் பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள சேஷாசலம் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (50). ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்.

இன்று காலை 4.30 மணியளவில் எழுந்து நடைப்பயிற்சி சென்றார். அதன் பின்னர் 5 மணிக்கு அவரது மகள் கோமதி நடைப்பயிற்சிக்கு புறப்பட்டு சென்றார்.

அப்போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலில் உள்ள ஒரு பெரிய குத்து விளக்கில் மறைத்து வைத்து விட்டு சென்றார்.

நடைப்பயிற்சி முடிந்த பின்னர் நாராயணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 36 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

மேலும் அங்கிருந்த ரூ.4½ லட்சம் ரொக்கப்பணமும் திருடப்பட்டிருந்தது. மேஜை டிராயரில் இருந்த பீரோ சாவியை எடுத்து அதை திறந்து பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

யாரோ தெரிந்த நபர்தான் வீட்டு சாவியை எடுத்து கதவை திறந்து பீரோவில் வைத்திருந்த பணம் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். துப்புதுலக்க போலீஸ் மோப்ப நாயும் கொண்டு வரப்பட்டது. அது மார்க்கெட் வரை சென்று அங்கேயே நின்று விட்டது.

Similar News