செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம்-பைக் பறிப்பு

Published On 2016-07-29 17:43 IST   |   Update On 2016-07-29 17:43:00 IST
ஜெயங்கொண்டம் அருகே கத்தியை காட்டி மிரட்டி டாஸ்மாக் விற்பனையாளரிடம் பணம்– பைக்கை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழுர் கோட்டியால் பாண்டி பஜாரில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு தா.பழுர் காலனி தெருவை சேர்ந்த திருமுருகன் (வயது 35) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு, வியாபாரமான பணம் ரூ.90 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். கோட்டியால்– கீழமிக்கேல்புரம் இடையே வனத்து சின்னப்பர் ஆலயம் ஆர்ச் அருகே செல்லும் போது, திடீரென அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் 5பேர் திடீரென பாய்ந்து வந்து, திருமுருகனின் மோட்டார் சைக்கிளை வழி மறித்தனர்.

பின்னர் அவர் வைத்திருந்த பணத்தை பறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த 5பேரும் சேர்ந்து , திருமுருகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.90ஆயிரம் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து திருமுருகன் தா.பழுர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News