தேவாமங்கலம் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு துளிர் இல்லங்கள் தொடக்க விழா
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் ஒன்றியம் தேவாமங்கலம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவாக துளிர் இல்லங்கள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். உதய நத்தம் தமிழ்ச் செல்வம் முன்னிலை வகித்தார். துளிர் இல்லங்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் மணத்துணைநாதன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் டாக்டர்.வளர்மதி, டாக்டர் மயில் சாமி அண்ணாதுரை, டாக்டர் அப்துல் கலாம் ஆகிய பெயர்களில் துளிர் இல்லங்கள் தொடங்கப்பட்டன. அறிவியலின் தேவை, முக்கியத்துவம் மற்றும் இளம் விஞ்ஞானிகளாக மாணவர்களை உருவாக்கக்கூடிய தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்துதல், அறிவியல் சிந்தனைகள் வளர்த்தல், படைப்பாற்றல் திறனை வளர்த்தல், கல்வி சார்ந்த புத்தகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அறிவியல் புத்தகங்களை வெளியிடுவது போன்றவற்றை பற்றி மாணவர்களிடம் கருத்துகளை வழங்கினர்.
இதன் மூலம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் துளிர் திறனறிவு தேர்வு, ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தல் போன்றவற்றை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் செங்குட்டுவன் செய்து ஒருங்கிணைத்திருந்தார். முன்னதாக தலைமை ஆசிரியர் வெற்றிச்செல்வி வரவேற்றார். இறுதியில் மந்திரமா, தந்திரமா என்ற அறிவியல் விழிப்புணர்வு நடத்திய ஆசிரியர்கலை வாணன் நன்றி கூறினார்.