மீன்சுருட்டி அருகே குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியை வெட்டிய கணவர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தை அடுத்து மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பூராசாமி மகன் இளையராஜா (34). இவரது மனைவி மாலதி (30). இளையராஜா அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம்.
கடந்த 20–ம் தேதி இளையராஜா வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனையிடம் தகராறு செய்துள்ளார். மாலதி கோபித்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவியை அழைத்துவர முடிவு செய்து இளையராஜா மாமனார் வீட்டிற்கு சென்று மனைவி கூப்பிட்டுள்ளார். மாலதி வர மறுக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இளையராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை வெட்டியுள்ளார்.
இதை தடுக்க வந்த மாலதியின் தந்தை பால்ராஜையும் வெட்டியுள்ளார். உடன் அக்கம்பக்கம் நின்றுகொண்டிருந்தவர்கள் ஓடிவந்து காயம்பட்ட இருவரையும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மாலதி மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து மாலதி மீன்சுருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிந்து இளையராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றார்.