செய்திகள்

ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம்: ஈரோட்டிலிருந்து 250 வக்கீல்கள் சென்னை பயணம்

Published On 2016-07-24 17:46 IST   |   Update On 2016-07-24 17:46:00 IST
வக்கீல்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இதற்காக ஈரோட்டிலிருந்து 250 வக்கீல்கள் சென்னை பயணிக்க உள்ளனர்.
ஈரோடு:

வக்கீல்களுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்திலும் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

ஒரு மாதத்துக்கு மேலாகியும் வக்கீல்கள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் முடங்கி கிடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ரெயில் மறியல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) வக்கீல்கள் ஐகோர்ட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். இதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வக்கீல்கள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், பவானி உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 250 வக்கீல்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தனி பஸ்களில் இன்று இரவு சென்னை புறப்பட்டு செல்கிறார்கள்.

Similar News