செய்திகள்
பொதுமக்களிடம் கலெக்டர் பிரபாகர் மனுக்கள் வாங்கியபோது எடுத்த படம்.

அம்மா திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: கலெக்டர் பிரபாகர் தகவல்

Published On 2016-07-23 16:35 IST   |   Update On 2016-07-23 16:35:00 IST
அம்மா திட்ட முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

சித்தோடு பேரூராட்சி, நல்லாகவுண்டன்பாளையம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி தலைமையில் நடந்தது, இதில் கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார்.

நிகழ்ச்சியில் 11 பேர்களுக்கு முதியோர் உதவித்தொகை, 2 பேர்களுக்கு வாரிசு சான்றிதழ், 5 பேர்களுக்கு புதிய ரேசன் கார்டுகள், 15 பேர்களுக்கு ரேசன் கார்டு புதுப்பித்தல் என மொத்தம் 33 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

முதலமைச்சர் ஆணைக்கிணங்க அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றது. இம்முகாமில் பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் முதியோர் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், இலவச வீட்டுமனைப்பட்டாக்கள், நிலம் தொடர்பான பிரச்சனைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாதிசான்றிதழ்கள் புதிய குடும்ப அட்டைகள், குடும்ப அட்டைகளில் முகவரி மாற்றம், கடை மாற்றம் செய்தல், பெயர் நீக்கம் உள்ளிட்டவை தொடர்பான 80-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடிவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதில் சித்தோடு பேரூராட்சி தலைவர் வரதராஜன், தாசில்தார் வன்னியசெல்வம் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News