சிவகங்கை அருகே தேடப்பட்டு வந்த குற்றவாளி உள்பட 2 பேர் கைது
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள சாக்கோட்டை போலீஸ் நிலைய தலைமை காவலர் முத்து கிருஷ்ணன், ஊர்க்காவல் படையை சேர்ந்த அந்தோணி ஆகியோர் இன்று காலை ரோந்து சென்றனர்.
அப்போது ஒரு இடத்தில் தனியாக நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்த பாகங்களை 2 வாலிபர்கள் கழற்றிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் 2 பேரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்த பேட்டரியை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சூரியன்குளம் கிராமத்தை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (வயது 25), திருமயம் சமுத்திரபட்டியை சேர்ந்த பாஸ்கர் (30) என தெரியவந்தது.
இதில் பாலா மீது புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி என 12 வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து பாலா உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.