செய்திகள்
மானாமதுரையில் மழைகாலங்களில் சாலையோரத்தில் தண்ணீர் தேங்கிநிற்பதால் பொதுமக்கள் அவதி
மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். வடிகால் வசதி செய்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மழை பெய்யும் போது சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி விடுகிறது.
மானாமதுரை– சிவகங்கை ரோட்டில் சிப்காட், உடைகுளம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பும், தலைமை தபால் நிலையம் முன்பும், பாலம் இறக்கம் ஆகிய பகுதியில் தேங்கிய மழைநீர் வெளியே செல்ல வழியில்லாமல் சாலையில் குளம்போல் தேங்கி விடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும் சிவகங்கை ரோட்டில் மழை நீர் வெள்ளம்போல் செல்லும் போது கழிவு நீர் கால் வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் கலந்து செல்வதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. இனி மழைகாலம் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் சாலைகளில் மழைநீர் தேங்காமல் வடிகால் வசதி செய்து தண்ணீர் வடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.