செய்திகள்

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு: டாக்டர் ராமதாஸ் நாளை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

Published On 2016-07-12 13:54 IST   |   Update On 2016-07-12 13:54:00 IST
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வழக்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை பண்ருட்டி கோர்ட்டில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
பண்ருட்டி:

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன், எம்.எல்.ஏ.சுப.வீர பாண்டியன், நடிகர் நெப்போலியன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் உள்பட 50 பேர் மீது பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2-ந் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது ராமதாஸ் மற்றும் திருமாவளவன், வேல்முருகன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் கோர்ட்டில் ராமதாஸ், திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி பண்ருட்டி கோர்ட்டில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சுப. வீரபாண்டியன், ஆகியோர் ஆஜரானார்கள்.

டாக்டர்ராமதாஸ், திருமாவளவன், நடிகர் நெப்போலியன் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

டாக்டர் ராமதாஸ் சார்பில் வக்கீல் ராஜாராம் ஆஜரானார். அப்போது அவர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை. அவர்மீது போலீசார் பொய்வழக்கு போட்டுள்ளனர்.

அவர் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தோம். வழக்கை விசாரித்த நீதிபதி பண்ருட்டி கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் நாளை ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

திருமாவளவன் சார்பில் வக்கீல் தாமரைசெல்வன் ஆஜரானார். அவர் கூறும்போது, பண்ருட்டி கோர்ட்டில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் ஆஜராகின்றனர்.

இந்த நேரத்தில் திருமாவளவன் கோர்ட்டுக்கு ஆஜராக வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அவர் கோர்ட்டில் ஆஜராவதற்கு வேறொரு தேதியை ஒதுக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.

இதையொட்டி வருகிற 18-ந் தேதி பண்ருட்டி கோர்ட்டில் திருமாவளவன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

நடிகர் நெப்போலியன் சார்பில் அவரது வக்கீல் ஆஜரானார். அவர் கூறும்போது நடிகர் நெப்போலியன் ஆஜராவதற்கு சம்மன் வந்து சேரவில்லை என்று கூறினார். இதையடுத்து வருகிற 18-ந் தேதி நடிகர் நெப்போலியன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அரசியல் தலைவர்கள் ஆஜரானதையொட்டி கோர்ட்டு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது.

Similar News