செய்திகள்

போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: புதுக்கோட்டை கலெக்டர் எச்சரிக்கை

Published On 2016-07-09 11:32 IST   |   Update On 2016-07-09 11:32:00 IST
போதை சாக்லேட்டுகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ் எச்சரிக்கை செய்துள்ளார்
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்ககையில் கூறியிருப்பதாவது:-

தற்பொழுது தமிழகத்தில் சில பகுதிகளில் போதை மருந்து கலந்த சாக்லேட்டுகள் விற்பனை கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் கல்லூரிகள், மாணவ மாணவி விடுதிகள் போன்ற இடங்களில் மட்டுமல்லாது மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் போதை மருந்து கலந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்வதுடன் விற்பனையாளர்கள்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடுமையாக எச்சரிக்கப்படுகின்றது.

மாணவ மாணவியர், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எவரேனும் போதை மருந்து கலந்த சாக்லேட்டுகள் விற்பனை செய்வது குறித்து விபரம் தெரிந்தால் அத்தகவலை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொலைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அலுவலகத்திற்கு 04322-22199 என்ற தொலைபேசியிலும் 9443158399 என்ற அலைபேசியிலும் தொடர் புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

மேலும், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை அல்லது நிகோட்டின் கலந்த பான்மசாலா, குட்கா போன்ற உணவுப் பொருட்களின் சேமிப்புக் கிட்டங்கியைப் பற்றியோ விற்பனையைப் பற்றியோ தகவல் அறிந்தால் தாங்கள் மேற்கூறிய தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறப்பட்டுள்ளது.

Similar News