செய்திகள்

புதுக்கோட்டையில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடப் பணிகள்: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வு

Published On 2016-07-05 17:59 IST   |   Update On 2016-07-05 17:59:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டிடப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண்மை துறையின் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மைத் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி தமிழக அரசு வேளாண்மை துறைக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த புதிய வேளாண் விரிவாக்க மைய அலுவலக கட்டிட கட்டுமானப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இவ்வலுவலக கட்டிடத்தின் தரைத் தளம் 3816 சதுர அடி பரப்பளவிலும், முதல் தளம் 1586 சதுர அடி பரப்பளவிலும் என மொத்தம் 5402 சதுர அடி பரப்பளவில் ரூ.79,87,753- மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதே போன்று இடப்பொருள் தானியங்கிடங்கு 2400 சதுர அடியில் ரூ.32,61,788- மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருவதுடன் அலுவலக உபயோகப்பொருட்கள், குடிநீர் வசதி, மின்சாதன வசதிகள் போன்ற பல்வேறு வசதிகள் ரூ.37,50,459- மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் இந்த புதிய வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய அலுவலகங்கள் செயல்படவுள்ளது.

மேலும் இக்கட்டிட கட்டுமானப்பணிகளை தரமான கட்டுமானப்பொருட்களை கொண்டு தரமாகவும், விரைவாகவும் கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.மாரிமுத்து, வருவாய் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கெர்ணடனர்.

Similar News