செய்திகள்

விருத்தாசலத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2016-07-02 16:31 IST   |   Update On 2016-07-02 16:31:00 IST
விருத்தாசலத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் செம்பருத்தி பூ தெருவைச் சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 45). டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி பரமேஸ்வரி(36).

நேற்று இரவு பாலசந்திரன் தனது குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று விட்டார்.

இதைநோட்டமிட்ட மர்மமனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். பாலசந்திரன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் பீரோ மேல் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்தனர். அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இன்று காலை வீட்டிற்கு வந்த பாலசந்திரன் வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் அதேபகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் மர்ம மனிதர்கள் கொள்ளை அடித்துள்ளனர். விருத்தாசலம் செம்பருத்தி பூ தெருவில் அ.தி.மு.க.பிரதிநிதி மாதவன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார்.

நள்ளிரவில் இவர் வீட்டிற்குள் புகுந்த மர்ம மனிதர்கள் அங்கிருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள டிவியை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுதொடர்பாகவும் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News