செய்திகள்

தீ விபத்தில் வீட்டை இழந்த மூதாட்டிக்கு 8-ம் வகுப்பு மாணவி நிதி உதவி

Published On 2016-07-02 14:32 IST   |   Update On 2016-07-02 14:32:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி வீடு எரிந்து சாம்பல் ஆனது. இந்நிலையில் மூதாட்டிக்கு உதவும் வகையில் 8–ம் வகுப்பு மாணவி அவருக்கு நிதி உதவி வழங்கி உள்ளார்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவரது மனைவி பெரியம்மாள் (வயது 70). இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவர் இறந்து விட்டார். பெரியம்மாள் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வெளியேவர முடியாமல் தவித்த பெரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை காப்பாற்றினர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததால் வீடு மற்றும் உடமைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இச்சம்பவத்தை பற்றி கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேவியர் என்பவர் தனது வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தார். இதை சேவியரின் மூத்த மகள் பாஸ்டினா(13) கவனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே பாஸ்டினா தனது தந்தை கொடுத்த பணத்தை சிறுக சிறுக சேமித்து 455 ரூபாய் வைத்திருந்தார். அந்த பணத்தை பாதிக்கப்பட்ட பெரியம்மாளுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் என்று தனது தந்தையிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து சேவியர் தனது மகள் பாஸ்டினாவை பெரியம்மாள் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு பாஸ்டினா தான் சேமித்து வைத்த தொகையை மூதாட்டியிடம் வழங்கினார்.

8–ம் வகுப்பு படித்து வரும் மாணவியின் மனித நேயத்தை அனைவரும் பாராட்டினர்.

Similar News