செய்திகள்

தொழில் அதிபரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி: மேலும் 5 பேர் கைது - 2 பேர் கோர்ட்டில் சரண்

Published On 2016-06-30 13:38 IST   |   Update On 2016-06-30 13:38:00 IST
தொழில் அதிபரை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார்கள்.
செங்கல்பட்டு:

மறைமலைநகர், கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் திருமாறன். தொழில் அதிபர். நேற்று முன்தினம் அவர் செல்லிமேடு கூட்டுச் சாலையில் காரில் சென்ற போது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி தாக்கினார்.

இதில் திருமாறன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக திருக்குழுக்குன்றம் கோர்ட்டில் மகேஷ், மாரியப்பன் ஆகியோர் சரண் அடைந்தனர். இதையடுத்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த நாயகம், கூடுவாஞ்சேரி சரவணன், கேரளாவை சேர்ந்த ரமேஷ், தாம்பரம் யுவராஜ், ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே செங்கல்பட்டு கோர்ட்டில் தாம்பரத்தை சேர்ந்த பிரபு, நின்னாகாட்டூர் ராமு ஆகியோர் சரண் அடைந்து உள்ளனர்.

இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார்கள். 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முக்கிய குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்று தெரிகிறது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். கோர்ட்டில் சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

Similar News