மயிலாடுதுறை அருகே கோவில் திருவிழாவில் மோதல்: 26 பேர் கைது
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள மல்லியம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. 50 ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறிய ராஜகம்பள வகையறாவான குறிஜோதிடம் சொல்லும் இனத்தவர்கள் இக்கோவிலை கட்டி வழிப்பட்டு வந்தனர். தற்போது அந்த பகுதியில் 105 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குறி ஜோதிடம் சொல்லும் அவர்கள் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று 10 மாதம் வரை தங்கி சம்பாதித்து விட்டு 2 மாதம் சொந்த ஊரில் இருப்பார்கள்.
ஓவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் 7 நாட்கள் கோவில் திருவிழா நடைபெறும். சமீபகாலமாக அங்கு உள்ள 105 குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் துரைராஜ் என்பவர் தரப்பு ஒருபிரிவாகவும், சரவணன் என்பவர் ஒருபிரிவாகவும் உள்ளனர். இதில் சரவணன் தரப்பினர் 7-ம் ஆண்டு திருவிழா நடத்த பத்திரிக்கை அளித்துள்ளனர். ஆனால் துரைராஜ் தரப்பினருக்கு பத்திரிக்கை வழங்க மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 24-ம் தேதி கோவிலில் நடந்த யாகத்தை ஒரு தரப்பினர் தண்ணீர் ஊற்றி நிறுத்தி உள்ளனர். இத்தகவல் அறிந்து குத்தாலம் போலீசார் இருதரப்பினரையும் ஒன்றாக இணைந்து கோவில் திருவிழா நடத்தவேண்டும் என்று கூறி கோவிலை பூட்ட வைத்தனர்.
இதனால் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினருக்கும் இடையே திடீர் என தகாராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் . அரிவாளால் வெட்டியதில். 2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மயிலாடுதுறை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 2 பேரை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த மோதல் குறித்து 44 பேர் மீது வழக்குபதிவு செய்து இருதரப்பை சேர்ந்த 26 பேரை கைது செய்தனர். மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால். அங்கு 100-கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.