செய்திகள்

கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் விஞ்ஞானிகள் கடத்தல் ஒத்திகையால் பரபரப்பு

Published On 2016-06-26 17:33 IST   |   Update On 2016-06-26 17:33:00 IST
கல்பாக்கம் அணுமின்நிலையத்தில் விஞ்ஞானிகள் கடத்தல் ஒத்திகையால் ஊழியர்களுக்கிடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இங்கு தீவிரவாதிகள் ஊடு வலை தடுப்பது குறித்து அதிகாரிகள் அடிக்கடி பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை 5 பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் போல் கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் ஊடுருவினர். இதுபற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

தீவிரவாதிகள் போல் அணுமின்நிலைய பகுதிக்குள் புகுந்த 5 பேரும் அங்கிருந்த விஞ்ஞானிகள் சிலரை துப்பாக்கி முனையில் கடத்தி அருகில் உள்ள அறைக்குள் அடைத்தனர். மேலும், நிபந்தனைகள் விதித்து அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பயத்தில் வெளியே செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களை பாதுகாப்பு படையினர் வெளியே செல்ல அனுமதிக்க வில்லை. இதைத்தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு வீரர்கள், ராணுவத்தினர் மற்றும் கமாண்டோ படையினர் அணுமின் நிலையத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் போல் வேடமிட்ட பாதுகாப்பு படையினரிடம் சிக்கிய விஞ்ஞானிகளை அதிரடியாக மீட்டனர்.

இதன்பின்னரே இது ஒத்திகை என்பது அங்கிருந்த ஊழியர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து விட்டதாக நகரிய குடியிருப்புகளிலும் தகவல் பரவியது.

அங்கிருந்த ஊழியர்களின் உறவினர்கள் போன் மூலம் அணுமின்நிலையத்தை தொடர்பு கொண்டு விசாரித்தனர். பாதுகாப்பு ஒத்திகை என்று அதிகாரிகள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Similar News