செய்திகள்

மயிலாடுதுறை அருகே ஆசிரியையிடம் நகை பறித்த கொள்ளையர்கள் சிக்கினர்

Published On 2016-06-25 15:41 IST   |   Update On 2016-06-25 15:41:00 IST
மயிலாடுதுறை அருகே ஆசிரியை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஓப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி (வயது40). இவர் கன்னியாநத்தம் காமாட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் நேற்று மாலை பள்ளி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் அணிந்திருந்த நகையை நோட்டமிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த கன்னியாநத்தம் மதகு திருப்பத்தில் அவர் வந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த 2 பேரும் வேகமாக வந்து அவரது மோட்டார் சைக்கிளிளை கீழே தள்ளி விட்டு செந்தமிழ் செல்வி அணிந்திருந்த 13 பவுன் நகைகளை பறித்துள்ளனர். அதனை அந்த வழியாக வந்த சிலர் பார்த்து அங்கு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

அப்போது மர்ம நபர்கள் தப்பி சென்ற மோட்டார் சைக்கிளின் டயர் சிறிது தூரம் சென்றதும் திடீர் என பஞ்சரானது. இதனால் மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு அருகிலிருந்த வயல் வெளியில் இறங்கி தப்பியோடினர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை துரத்தி சென்று சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதுகுறித்து மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் அந்த 2 பேரையும் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை நக்கம்பட்டியை சேர்ந்த சேதுராஜன் (வயது 34), புதுக்கோட்டை அறந்தாங்கி, அவுலியா நகர் சுபீர்கான் (25) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியை தாக்கி நகையை பறித்த கொள்ளையர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசில் ஓப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News