சத்தியமங்கலம் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியையொட்டி உள்ள டி.என்.பாளையம், பெரும்பள்ளம் அணை, கே.என்.பாளையம், டி.ஜி. புதூர், சிக்கரசம் பாளையம், ராஜன் நகர், பண்ணாரி ஆகிய பகுதிகளில் முன்பு மர்ம பேர் வழிகள் கஞ்சா கடத்தி விற்று வந்தனர்.
இதனால் பலர் கஞ்சாவுக்கு அடிமையாகும் சூழ்நிலையும் உருவானது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி கஞ்சா கடத்தல் பேர் வழிகளை பிடித்து சிறையில் தள்ளினர் மேலும் சிலரை விரட்டியடித்தனர்.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கஞ்சா விற்பது மிகவும் குறைந்தது. முக்கிய கஞ்சா புள்ளிகளை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஒரு ஆண்டு ஜெயிலிலும் அடைத்தனர்.
இப்போது மீண்டும் கஞ்சா கடத்தல் கும்பல் தலை தூக்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி சத்தியமங்கலம் பகுதியில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி பங்களாபுதூர் போலீசார் சாட்டையை கையில் எடுத்தனர். பல்வேறு பகுதிகளில் அதிரடி விசாரணை நடத்தினர். கஞ்சா பேர் வழிகளை தேடி வந்தனர்.
கே.என்.பாளையம் நரசாபாளையம மினியப்பன் கோவில் அருகில் உள்ள 2 பெண்கள் கஞ்சா சப்ளை செய்ததை கண்டனர்.
இதை கண்டதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் ஒரு பெண் 1½ கிலோ கஞ்சாவை தூக்கி வீசி விட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் விடாமல் விரட்டினர். இதில் ஒரு பெண் மட்டும் சிக்கினார். அவர் பெயர் கருப்பாயாள் (65). நரசாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. போலீசார் கருப்பாயாளை கைது செய்தனர்.
மேலும் தப்பி ஓடிய இதே பகுதியை சேர்ந்த சரசாள் மற்றும் 2 பேர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மேலும் இந்த சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கைது செய்யப்பட்ட கருப்பாயாள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பெண்களே கஞ்சா கடத்தி விற்று வரும் சம்பவம் டி.என்.பாளையம், பங்களாபுதூர், சத்தியமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.