செய்திகள்

மயிலாடுதுறை நகரில் நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

Published On 2016-06-23 15:25 IST   |   Update On 2016-06-23 16:07:00 IST
மயிலாடுதுறை நகரில் அனைத்து வார்டுகளிலும் தெருநாய் கூட்டம் கூட்டமாய் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை நகராட்சி கூட்டம் தலைவர் பவானிசீனுவாசன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:

ரமேஷ்:சுடுகாட்டிற்கு அருகே அமைந்துள்ள பொது கழிப்பிடத்திற்கு செப்டிக் டேங்க் இல்லாமல் உள்ளதால் அதை கட்ட வேண்டும். திருவிழந்தூர் பகுதியில் தண்ணீர் சரிவர வருவதில்லை. அதை சரிசெய்து தரவேண்டும்.

எஸ்.கணேசன்: மயிலாடுதுறை நகரில் அனைத்து வார்டுகளிலும் தெருநாய் கூட்டம் கூட்டமாய் இருக்கிறது. இதனால் பொதுமக்கள், இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை இணைப்புக்கு பொதுமக்கள் செலுத்தும் டெபாசீட் தொகையை 2 தவணை முறையில் கட்ட நகராட்சி ஆவன செய்ய வேண்டும்.

ரகு: மழைக்காலம் வரவுள்ளதால் நகரில் மழைநீர் வடிகால் வாய்காலில் உள்ள மண்ணை அகற்ற வேண்டும்.

காமராஜ்: மயிலாடுதுறை நகராட்சி பொன்விழா 150–ம் ஆண்டை முன்னிட்டு நினைவு தூண் அமைக்க வேண்டும்.

தனபால்: நகரின் பிரதான சாலைகளில் தனியார் நிறுவனங்களின் ஓட்டல்களின் பெயரில் விளம்பரம் உள்ளதை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.எஸ்.ராஜேந்திரன்: வண்டிக்கார தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், தற்காலிக பேருந்து நிலையம் பகுதியில் அழுகிய பழங்களை கொட்டுவதை நகராட்சி தடுக்க வேண்டும். கச்சேரி சாலையை உயர்த்துகிறேன் என பொதுப்பணி துறையினர் வடிகால் வாய்காலை உடைத்து சென்றுள்ளனர். இதனால் மழை நேரங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி வருகிறது. அதை நகராட்சி மழைகாலத்துக்கு முன் சரிசெய்ய வேண்டும் .

டி.ஆனந்தகுமார்: 7–வது வார்டில் விடுதியும், 34–வது வார்டில் தனியார் பள்ளியும் நகராட்சி அனுமதியில்லாமல் செயல்படுகிறதா? மட்டக்குளத்துக்கு காவிரி தண்ணீர் வரும் வழியை அடைத்து சாலை அமைத்துள்ளது ஏன்?

ஆணையர்: பொக்லைன் வைத்து மட்டக்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அசோக்குமார்: தருமைபுரம் ஆர்ச் எதிரில் பாதாள சாக்கடை வால்வு உள்ளது. பம்பிங் ஸ்டே‌ஷனில் மோட்டார் போட்டால் இங்குள்ள வால்வு வழியாக அசுத்த நீர் துர்நாற்றதுடன் வெளியேறுகிறது. உடனடியாக சம்மந்தபட்ட ஒப்பந்ததாரர் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உஷாராணி: நகரில் தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

ஜெயலெட்சுமி:– குடிநீர் கலங்கலாக வருகிறது. மேலும் அறிவிப்பின்றி சிலநாட்கள் குடிதண்ணீர் வருவதில்லை. குடிநீர் காலையிலும், மாலையிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் துணைத் தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News