செய்திகள்

9-ம் வகுப்பு, பிளஸ்-1 மாணவர்களை பாஸ் பண்ண வைக்க பணம் வசூல்

Published On 2016-06-23 11:58 IST   |   Update On 2016-06-23 11:58:00 IST
மாணவர்களை பாஸ் செய்ய பணம் வசூல் செய்வதாக கூறி பள்ளியில் பெற்றோர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:

நாகை நீலா வீதி நாலுகால் மண்டபம் பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த கல்வி ஆண்டில் 9–ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 வகுப்பில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக மாற்றி அறிவிக்க பள்ளி நிர்வாகம் பணம் கேட்பதாக மாணவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரை சந்தித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பணம் கேட்பது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது ஆசிரியர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்ததும் நாகை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்களை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள் என அனுப்பி வைத்தனர்.

இதன் பின்னர் பெற்றோர்கள் அங்கிருந்து சென்றனர்.

Similar News