செய்திகள்

பிடிபட்ட திருடனை ஒப்படைக்க மறுப்பு: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார்-பொதுமக்கள் மோதல்

Published On 2016-06-21 17:30 IST   |   Update On 2016-06-21 17:30:00 IST
புதுக்கோட்டையில் பிடிபட்ட திருடனை ஒப்படைக்க மறுத்ததால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பெரியாளுர் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மின்மோட்டார், இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இது குறித்து பொதுமக்கள் போலீசிடம் புகார் அளித்தும், திருடனை பிடிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அப்பகுதியில் உள்ள சின்னகருப்பர் கோவிலில் யாரோ ஆயுதங்களை கொண்டு பூட்டை உடைப்பது போல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் கோவிலை திறந்து பார்த்த போது 3 பேர் கடப்பாரை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கோவில் உண்டியலை உடைத்து கொண்டிருந்தனர்.

இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்களை பிடிக்க முயன்றபோது, 2 பேர் தப்பியோடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து விசாரித்த போது, அவர் மேற்பனைகாட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் கீரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, திருடனை தங்களிடம் ஒப்படைக்க கோரினர். ஆனால் போலீசாரின் கோரிக்கையை நிராகரித்த பொதுமக்கள், திருடனை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப் போவதாக கூறி, ஒரு வேனில் திருடனை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த டவுன் டி.எஸ்.பி. பாலகுரு, பெரியாளுர் கிராமத்தில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். இதில் திருப்தியடைந்த பொதுமக்கள் திருடனை போலீசில் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Similar News