படகு கவிழ்ந்து மகன்கள் பலி: மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 55) இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரது மகன்கள் காளிதாஸ், கலையரசன், கிருஷ்ணசாமி மகன் வினித் ஆகிய 3 பேரும் கடந்த 15–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
வெள்ளப்பள்ளத்தில் இருந்து தென்கிழக்கு பகுதியில் 3 பேரும் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அவர்கள் மீன்பிடித்து விட்டு அன்று மதியம் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் பைபர் படகில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்களை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளப்பள்ளத்தில் இருந்து கிழக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் காளிதாஸ், வினித் ஆகிய 2 பேரின் உடல் மிதந்தது. உடனே 2 பேரின் உடலையும் மீனவர்கள் மீட்டு வெள்ளப்பள்ளத்திற்கு கொண்டு வந்தனர். கலையரசனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தில் இருந்து 11 படகுகளில் சுமார் 50–க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று கலையரசனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் வெள்ளப்பள்ளத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்கடல் பகுதியில் ஒரு பிணம் மிதந்தது. இந்த பிணத்தை மீனவர்கள் மீட்டு பார்த்த போது அது கடலில் மாயமான கலையரசன் என்பது தெரியவந்தது.
கலையரசன் உடலை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடல் கடற்கரையில் வைத்து பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அவரது உடல் வெள்ளப்பள்ளத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனை கண்ட சாமிகண்ணு மீன்பிடிக்க சென்ற தனது 2 மகன்களும் படகு கவிழ்ந்து இறந்துவிட்டதால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு ஆறுதல் கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் கடலில் விழுந்து இறந்த சம்பவம் வெள்ளப்பள்ளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.