செய்திகள்

குடிபோதையில் பணியில் இருந்த ரெயில்வே அலுவலர் சஸ்பெண்டு

Published On 2016-06-09 16:51 IST   |   Update On 2016-06-09 16:51:00 IST
குடிபோதையில் பணியில் இருந்து ரெயில்வே பார்சல் பிரிவு அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை காமராஜர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (52). இவர் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் பார்சல் பிரிவில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் பழையாறு, தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த மீன் வியாபாரிகள் பார்சல்கள் மூலம் மீன்களை திருச்சி, சென்னை, பெங்களூரு ஆகிய மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்காக மைசூர் எக்ஸ்பிரசில் ஏற்ற வந்தனர். அப்போது பார்சல் பிரிவு அலுவலர் கணேசன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்சலை பதிவு செய்து அதற்கான ரசீதை மீனவர்களிடம் வழங்க முடியவில்லை.

ரெயில் சரியான நேரத்தில் புறப்பட்டு சென்றதால் மீன்களை அதில் ஏற்ற முடியவில்லை. பின்னர் வாடகை வாகனங்கள் மூலம் வியாபாரிகள் மீன்களை அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மீன் வியாபாரிகள் தென்னக ரெயில்வே திருச்சி முதன்மை கோட்ட அதிகாரிக்கு புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை செய்த கோட்ட அதிகாரி பார்சல் அலுவலர் கணேசனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Similar News