செய்திகள்

பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்திய தலைமையாசிரியை சஸ்பெண்ட்

Published On 2016-06-09 10:18 IST   |   Update On 2016-06-09 10:18:00 IST
அரியலூரில் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை கட்டாயப்படுத்திய தலைமையாசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் சாலையக்குறிச்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி அருகில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியை புனிதவதி பள்ளிக்கு தாமதமாக வருவதோடு, மாணவர்களுக்கு சரியான கல்வி கற்று தருவதில்லை என்று பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டு வந்தது

மேலும் பள்ளியில் உள்ள கழிவறைகளை மாணவ-மாணவிகள் மூலம் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று பள்ளிக்கு வந்த தலைமையாசிரியை பள்ளியில் உள்ள கழிவறையையும், வகுப்பறைகளையும் சுத்தம் செய்யுமாறு மாணவர்களை கட்டாயப்படுத்தினாராம்.

இதுகுறித்த தகவல் அறிந்த பெற்றோர்கள் ஆத்திரமடைந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியில் இருந்த மாணவர்களை அழைத்து கொண்டு பள்ளியின் வகுப்பறையை பூட்டினர். மேலும் தலைமையாசிரியை புனிதவதியை இடமாற்றம் செய்து புதிதாக தலைமையாசிரியர் நியமிக்க வேண்டும் என்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொடக்க கல்வி அலுவலர் விஜயலட்சுமி பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தலைமையாசிரியை புனிதவதி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் இதுவரை உதவி தலைமையாசிரிராக இருந்த திரிநிஷாபால் தலைமையாசிரியராக தற்காலிகமாக பொறுப்பேற்பார் என உறுதியளித்ததை தொடர்ந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் விட்டு சென்றனர். மேலும் தலைமையாசிரியை புனிதவதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Similar News