செய்திகள்

நெசவு தொழிலை மீண்டும் தொடங்கினால் 250 யூனிட் இலவச மின்சாரம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்

Published On 2016-06-01 12:57 IST   |   Update On 2016-06-01 12:57:00 IST
நெசவு தொழிலை கைவிட்டவர்கள் மீண்டும் தொழில் தொடங்க விரும்பி விண்ணப்பித்தால் அவர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்தார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஜரிகை ஆலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆலையின் செயல்பாடுகள் மற்றும் ஜரிகை தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்து தங்கமுலாம் பூசும் கூடத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தில் பட்டுசேலை வடிவமைப்பினை பார்வையிட்டதுடன் விற்பனை மற்றும் பொது மக்கள் சேவை குறித்து நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஏற்கனவே விசைதறி தொழிலாளர்கள் அத்தொழிலை கைவிட்டு வேறு தொழில்களுக்கு சென்று விட்டதால் அவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது.

மீண்டும் இத்தொழிலை அவர்கள் தொடங்கினால் அவர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்தார். கைத்தறி துணி நூல் மற்றும் கதர்துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங், மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், கோ-ஆப்டெக்ஸ் மாநில துணை தலைவர் ஜெயந்தி சோம சுந்தரம், முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் வள்ளிநாயகம், கேயுஎஸ். சோமசுந்தரம், கைத்தறி மற்றும் துணிநூல்துறை கூடுதல் இயக்குனர் கர்ணன், சப் கலெக்டர் அருண்தம்பு ராஜ், இணை இயக்குனர் மோகன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News