தூசி அருகே விபத்து: தறி தொழிலாளி பலி
வெம்பாக்கம்:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள மானாமதி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் ராஜேஸ் (வயது28). பட்டுத்தறி தொழிலாளி. பட்டுத்தறி கூடத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கடந்த 26-ந்தேதி ராஜேஸ் தனது மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் நோக்கி திருவண்ணாமலை மாவட்டம் தூசி வழியாக புறப்பட்டார்.
மாங்கால் கூட்ரோடு அருகே வந்த போது எதிரே செய்யாறில் இருந்து வந்த காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் ராஜேஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். விபத்து ஏற்பட்டதும் கார் டிரைவர் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த ராஜேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலன் அளிக்காமல் ராஜேஸ் நேற்று பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துளசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.