செய்திகள்

மம்தாபானர்ஜி பதவி ஏற்பு விழாவில் நாகரீகமான முறையில் வரவேற்பு கிடைத்தது: கனிமொழி பேட்டி

Published On 2016-05-28 12:08 IST   |   Update On 2016-05-28 12:08:00 IST
மேற்கு வங்காள முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் நாகரீகமான முறையில் வரவேற்பு கிடைத்தது என்று தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:

மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்ற விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து அவர் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநிலங்களவையில் தி.மு.க. தமிழக மக்களுக்காகவும், தமிழகத்துக்காகவும் குரல் கொடுத்து வருகிறது. அதில் எப்போதும் தவறியதில்லை. தொடர்ந்து அதை செய்வோம்.

தமிழகத்தில் முதல்- அமைச்சர் பதவி ஏற்பு விழாவை விட மேற்கு வங்காள முதல்-மந்திரி பதவி ஏற்பு விழாவில் எனக்கு நாகரீகமான முறையில் வரவேற்பு கிடைத்தது.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் நடுவரிசையில் அமர வைக்கப்பட்டதற்கு ஜெயலலிதா அளித்த விளக்கமே சிறிய மாறுதல்தான்.

தற்போதுதான் அவர் பதவி ஏற்று இருக்கிறார். அவர் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், பொறுத்திருந்து பார்ப்போம்.

சட்டசபையில் பிரதான வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க. வந்திருக்கிறது. தலைவரும், தளபதியும் சட்டமன்றத்தில் தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக எங்களது குரல் ஓங்கி ஒலிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Similar News