செய்திகள்

காரைக்குடியில் கோஷ்டி மோதல்: 4 வாலிபர்கள் கைது

Published On 2016-05-22 23:11 IST   |   Update On 2016-05-22 23:11:00 IST
காரைக்குடி பகுதியில் கோவிலுக்கு சென்ற போது ஏற்பட்ட தகராறில் 2 கோஷ்டியினர் மோதிக் கொண்டனர். இதில் 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:

காரைக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர்  ஈஸ்வரமூர்த்தி. இவர் முத்தாளம்மன் கோவிலுக்கு தனது நண்பர்களுடன் சாமி கும்பிட சென்றார். இதேபோல் சத்யா நகரைச் சேர்ந்த விஜி, செல்வம் ஆகியோர் தனது நண்பர்களுடன் அந்த கோவிலுக்கு வந்தனர். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஈஸ்வரமூர்த்தி, அவரது நண்பர்கள் தாக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மேலும் சிலரைக் கூட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சத்யா நகருக்கு விஜி மற்றும் அவரது நண்பர்களைத் தேடி சென்றார். அங்கு அவர்கள் செல்வம் வீட்டிற்கு சென்று அவரை பற்றி விசாரித்துள்ளனர். அதற்கு செல்வத்தின் பாட்டி பத்மா அவன் எங்கு சென்றான் என்பது தெரியாது என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் பத்மாவை தாக்கியதாக தெரிகிறது. பின்னர், அவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தபோது விஜி மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை மறித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஈஸ்வரமூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள் காயமடைந்தனர். அவர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.

இதனைத்தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள்களையும் விஜி கோஷ்டியினர் அடித்து நொறுக்கினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று தலைமறைவாகினர். இந்த சம்பவம் குறித்து பத்மா அளித்த புகாரின் பேரில் கீழத்தெருவைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (வயது 19), ராமு (19), பரத்குமார் (19), சதீஷ்குமார் (19) ஆகிய 4 பேரை காரைக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணப்பன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

இதேபோல் ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் சத்யா நகரைச் சேர்ந்த விஜி, அஜித், மணி, செல்வம் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News