செய்திகள்

மீஞ்சூரில் வீடு புகுந்து வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி நகை-பணம் கொள்ளை

Published On 2016-05-22 21:47 IST   |   Update On 2016-05-22 21:47:00 IST
மீஞ்சூரில் வீடு புகுந்து வியாபாரியை கத்தி முனையில் மிரட்டி நகை-பணத்தை கொள்ளையடித்த முகமூடி அணிந்த மர்ம வாலிபர்.
பொன்னேரி:

மீஞ்சூர், பஜார் வீதி ஸ்ரீதேவி நகரில் வசித்து வருபவர் ராஜீ. மீஞ்சூரில் மெடிக்கல் கடை வைத்து உள்ளார். நேற்று இரவு அவரது மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இருந்தார். வீட்டில் ராஜீவும், வேலைக்கார பெண்ணும் இருந்தனர்.

அப்போது முகமூடி அணிந்த மர்ம வாலிபர் திடீரென வீட்டிற்குள் புகுந்தான். அவன் ராஜீவையும், வேலைக்கார பெண்ணையும் கத்தி முனையில் மிரட்டி நகை-பணம் இருக்கும் இடம் குறித்து கேட்டான்.

பயந்துபோன ராஜீ பீரோவில் இருந்த நகை, பணத்தை காட்டினார். மர்ம வாலிபர் 20 பவுன் நகை, ரூ. 25 ஆயிரத்தை கொள்ளையடித்தான். பின்னர் ராஜீவையும், வேலைக்கார பெண்ணையும் வீட்டிற்குள் அடைத்து கதவை வெளிப்புறம் பூட்டி தப்பிச் சென்றுவிட்டான். சிறிது நேரம் கழித்து அவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டனர்.

இந்த கொள்ளையில் மர்ம வாலிபர்கள் கும்பலாக ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. குடியிருப்பு அதிகம் உள்ள இடத்தில் வீட்டில் ஆட்கள் இருந்த போதே கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு அருகே உள்ள எடமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (30). இவர் வீட்டை பூட்டிவிட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.

நேற்று அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது கதவை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து திருப்பாலை வனம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News