செய்திகள்
கோவை ஆர்.எஸ்.புரத்தில் 2–வது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பலி
கோவை ஆர்.எஸ்.புரத்தில் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து 1½ வயது குழந்தை பரிதாபமாக பலியானது.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் தியாகிகுமரன் வீதியை சேர்ந்தவர் நெக்காராம் (வயது 24). நகைபட்டறை ஊழியர். இவரது மகன் நித்தீஷ்(1½).
இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மென்டில் 2–வது மாடியில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை குழந்தை நித்தீஷ் வீட்டு போர்டிகோவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நித்தீஷ் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தான்.
இதில் படுகாயமடைந்த நித்தீசை குடும்பத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நித்தீஷ் நேற்று இறந்தான்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.