செய்திகள்

தான் மட்டுமே அறிவாளி என்று நினைக்கிறார்: மதுரை பிரச்சாரத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த ராகுல்

Published On 2016-05-07 18:17 IST   |   Update On 2016-05-07 18:17:00 IST
தான் மட்டுமே அறிவாளி என்று முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்துக் கொண்டிருப்பதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
மதுரை:

தமிழக சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனி விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கிருந்து காரில் மதுரை ஊமச்சிச்குளம் அருகே நத்தம் மெயின்ரோட்டில் யாதவ கல்லூரி அருகில் நடைபெறும் பிரச்சாரக் கூட்ட அரங்கிற்கு சென்றார்.

பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தென்மாவட்ட தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசியதாவது:-

மக்களுடன் ஒன்றாக கலந்துள்ள தலைவர்களும் உண்டு. தீவு போல் மக்களை சென்று சந்திக்காமல் மக்கள் பிரச்சனைகளை உணராத தலைவர்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். அவர் யாரையும் சந்திப்பதும் இல்லை, பார்ப்பதும் இல்லை. தனக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கும் முதலமைச்சராக ஜெயலலிதா இருக்கிறார். தான் இந்த உலகத்தில் இருக்கிற ஒரே ஒரு அறிவாளி என்று நினைத்துக்கொண்டிருப்பவர் ஜெயலலிதா.  

தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது முதலமைச்சர் ஜெயலலிதா மக்களை நேரில் பார்க்கச் செல்லவில்லை. வெள்ள பாதிப்பு பற்றி கேள்விப்பட்டு நான் டெல்லியில் இருந்தே சென்னைக்கு வந்தேன். ஆனால், சென்னையில் இருந்த ஜெயலலிதா வீட்டைவிட்டு வெளியில் வரவில்லை. மக்களை சந்திக்காத முதலமைச்சர் நமக்குத் தேவையில்லை, அப்படிப்பட்ட அரசு தேவையில்லை.

இந்தியாவிலேயே தமிழ்நாடு வளர்ச்சியடைந்த மாநிலமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது வளர்ச்சியில் பின்தங்கிவிட்டது. தமிழகத்தில் ஊழல் உச்சத்திற்கு சென்றுள்ளது. முன்பெல்லாம் தமிழகத்திற்கு தொழிற்சாலைகள் வந்துகொண்டிருந்தன. இப்போது தொழிலதிபர்கள் யாரும் இங்கு முதலீடு செய்ய விரும்புவதில்லை. அதற்கு காரணம்,  இங்கே தொழில் தொடங்க வேண்டும் என்றால் ஆட்சி நடத்துபவர்களுக்கு ஏராளமான பணத்தை லஞ்சமாக கொடுக்க வேண்டும். எனவே, எந்த தொழிலதிபர்களும் இங்கு வருவதற்கு பயப்படுகிறார்கள்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக வளர்ச்சி அடையச் செய்வோம். தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழிற்சாலைகளை கொண்டு வருவோம். இதனால் தமிழக இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலத்திற்கு செல்லும் அவசியம் ஏற்படாது. மற்ற மாநிலங்கள் வியக்கும் அளவிற்கு வளர்ச்சியை ஏற்படுத்துவோம்.

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வோம். 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் 2000 ரூபாய்பென்சன் வழங்குவோம். மின்சார உற்பத்தியை பெருக்குவோம். பட்ட மேற்படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். பூரண மதுவிலக்கை அமல்படுததுவோம். இறுதியாக, ஊழல் இல்லாத நல்லரசை தருவோம் என்று உறுதி அளிக்கிறோம். இந்த தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் நல்லாட்சி மலரப்போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து கோவை மற்றும் சென்னையில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களிலும் ராகுல் உரையாற்றுகிறார்.

Similar News