செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணை தாக்கி நகை கொள்ளை

Published On 2016-05-07 13:07 IST   |   Update On 2016-05-07 13:07:00 IST
கூடுவாஞ்சேரி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணை தாக்கி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு:

கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரி, காட்டூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் மீனாட்சி.

நேற்று காலை இவரது மகன் வேலைக்கு சென்று விட்டார். மீனாட்சி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 3 வாலிபர்கள் கதவை தட்டி தண்ணீர் கேட்டனர். அவர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்காக மீனாட்சி கதவை திறந்து வைத்து வீட்டுக்குள் சென்றார். திடீரென 3 வாலிபர்களும் வீட்டுக்குள் புகுந்து அவரை மிரட்டி நகை - பணம் கேட்டனர். மீனாட்சி கொடுக்க மறுத்ததால் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

பின்னர் கொள்ளை கும்பல் மீனாட்சி அணிந்து இருந்த 2½ பவுன் நகை, பீரோவில் இருந்து 6½ பவுன் நகையை எடுத்து தப்பி சென்று விட்டனர்.

அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த மீனாட்சியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News