செய்திகள்

வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பயிற்சிகளை முறையாக கற்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

Published On 2016-04-26 21:22 IST   |   Update On 2016-04-26 21:22:00 IST
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பயிற்சிகளை முறையாக கற்க வேண்டும் என்று கலெக்டர் கணேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களை புதுக்கோட்டை மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கான மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர் டாக்டர். திராஜ்ஜெயின், கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அவர் கூறியதாவது:–

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நமது மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் தேர்தல் நாள், வாக்குப் பதிவு நேரம், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் எண்.1, அலுவலர் எண்.2, அலுவலர் எண்.3 ஆகியோரின் பணிகள், வாக்குப்பதிவிற்கு முன் செய்ய வேண்டிய பணிகள், வாக்குச்சாவடி முகவர் பணிகள், மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப் பதிவு ஆரம்பித்தல், வாக்குச்சாவடியில் நுழைய தகுதி படைத்தவர்கள், வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு, தபால் வாக்குப்பதிவு, மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு, வாக்களித்த வரிசை, பச்சை நிறம் முத்திரைத்தாள், வாக்குப்பதிவின் ரகசியம், செல்போன் பயன்பாடு, வாக்குப்பதிவு முடிவுற்றபின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை படிநிலை முறையில் இயக்குதல், வாக்குப்பதிவிற்கு முன்தினம் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவை நடத்துதல், மாதிரி வாக்குப்பதிவு முடிவை அறிவித்தல், வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார் செய்தல், வாக்குப்பதிவின் போதுள்ள நடைமுறைகள், வாக்குப்பதிவு முடிவிற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான பல்வேறு பணிகள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களும் இப்பயிற்சி வகுப்பினை முறையாக கற்று தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடத்தி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எஸ்.பி.அம்ரித், (புதுக்கோட்டை), சூரியகலா (திருமயம்), செல்வராஜ் (கந்தர்வக்கோட்டை), உதவி ஆணையர் (கலால்) மற்றும் பயிற்சி அலுவலர்பாலாஜி, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News