செய்திகள்

விபத்தில்சிக்கிய தம்பதிக்கு திருமாவளவன் உதவி: காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்

Published On 2016-04-26 12:57 IST   |   Update On 2016-04-26 12:57:00 IST
விபத்தில்சிக்கிய தம்பதிக்கு திருமாவளவன் உதவி காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.
சிதம்பரம்:

நாகை மாவட்டம் வக்ரமாரி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி மாலா. இவர்கள் இருவரும் சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் செல்லும் வழியில் உள்ள திருநாரையூர் என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். வெகுநேரமாகியும் ஆம்புலன்சு வரவில்லை. அந்த நேரத்தில் காட்டுமன்னார்கோவிலில் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு காரில் வந்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தனது காரை நிறுத்தினார்.

காரில் இருந்து இறங்கிய அவர் சம்பவம் பற்றி கேட்டறிந்தார். பின்னர் அந்த தம்பதியை தன்னுடன் வந்த ஒரு காரில் ஏற்றி சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவமனைக்கு கட்சி நிர்வாகிகளுடன் அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “விபத்தில் சிக்கிய தம்பதி, ஆம்புலன்சு வராமல் 1 மணி நேரத்துக்கும் மேலாக அவதிப்பட்டுள்ளனர். நான் அவர்களை காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தேன். ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக ஆம்புலன்சை கூட விட்டு வைக்கவில்லை. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இந்த நிலைமாற வேண்டும்” என்றார்.

Similar News