செய்திகள்

திருவண்ணாமலை அருகே கள்ளச்சாராயம் விற்ற 5 பெண்கள் கைது

Published On 2016-04-25 16:42 IST   |   Update On 2016-04-25 16:42:00 IST
திருவண்ணாமலை அருகே கள்ளச்சாராயம் விற்ற 5 பெண்கள் கைது

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கள்ளச்சாராயம் விற்பனை செய்யும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும், அதனை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கைது செய்யும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமுத்திரம் காலனி, கம்மங்குளம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவண்ணாமலை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சமுத்திரம் காலனி, கம்மங்குளம் பகுதிகளில் ரோந்து பணி சென்றனர்.

அப்போது சமுத்திரம் காலனி பகுதியில் வெவ்வெறு இடங்களில் பெண்கள் 3 பேர் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சமுத்திரம் காலனியை சேர்ந்த கலைவாணி (வயது 50), பூங்காவனம் (55), விருதம்மாள் (42) என தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 18 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் கம்மங்குளம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த பாஞ்சாலி (48), முனியம்மாள் (52) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 7 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து 5 பெண்களையும் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 25 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News