புதுக்கோட்டை அருகே வாகன சோதனையில் ஜெயலலிதா படம் பொறித்த பனியன், தொப்பிகள் பறிமுதல்
ஆலங்குடி:
தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் கடத்தப்படுவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 36 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பஞ்சநாதன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அந்த காரில் அ.தி.மு.க. சின்னம் மற்றும் ஜெயலலிதா படம் பொறித்த பனியன்கள், தொப்பிகள் உள்ளிட்டவைகள் 9 சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆலங்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபாரதி விசாரணை நடத்தி வருகிறார்.