புதுக்கோட்டையில் வாக்குப்பதிவின் போது வாகனங்களில் 5 நபர்கள் மட்டுமே பயணம்: கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்ட மன்ற தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
ஆலங்குடி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட ஆலங்குடி வட்டம், பாத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வன்னியன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அறந்தாங்கி வட்டம், மறமடக்கி, கரிசக்காடு மற்றும் சுனையக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
புகார் பதிவேடு, தேர்தல் பொருட்கள் இருப்பு பதிவேடு, கடித உறை இருப்பு பதிவேடு போன்ற பல்வேறு தேர்தல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் பணிகள் பார்வையிட்டும், வாக்காளர் சேவை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பணிகளை பார்வையிட்டும், ஆலங்குடி கே.வி.எஸ் தெருவில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தும், வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியும் மற்றும் சுவரொட்டிகள் ஒட்டியும், கல்லாலங்குடி கிராம அங்காடியில் அனைத்து குடும்ப அட்டைகளிலும் மே 16 நடைபெறும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதுடன், குளவாய் பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்குப்பதிவின் போது 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான கணேஷ் கூறினார்.
இந்த ஆய்வின் போது உதவி ஆட்சியர் (பயிற்சி) விஜயலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபாரதி, உதவி ஆணையர் (கலால்) மற்றும் பயிற்சி அலுவலர் பாலாஜி, வட்டாட்சியர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெங்கராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.