வெடி விபத்தில் பலியான தொழிலாளர்கள்.
வடமதுரை அருகே கல்குவாரியில் பாறை வெடித்து 2 பேர் பலி
- குவாரியில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பாறை வெடித்து சிதறியது.
- 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சுந்தராபுரியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த குவாரியில் இன்று பாறைகளை உடைப்பதற்காக அதிக சக்தி கொண்ட வெடிகள் வைக்கப்பட்டது.
அதன் அருகிலேயே தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக பாறை வெடித்து சிதறியது. இதில் அங்கு வேலைபார்த்து கொண்டிருந்த அரசம்பட்டியை சேர்ந்த நாராயணன்(47), சுந்தராபுரியை சேர்ந்த வேலு(50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாறைகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் உயிருக்கு பயந்து ஓட தொடங்கினர். தொழிலாளர்கள் உயிரிழந்தது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் வேறு எங்கேனும் வெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்று குவாரி உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.